"இரும்புத்திரை" திரைப்பட பாணியில் கனரா வங்கி மூலம் மிகப்பெரிய மோசடி?

 *டைம்ஸ் ஆப் ப்ரீடம் - பிரத்யேக செய்தி | கோவை*



"இரும்புத்திரை" திரைப்பட பாணியில் ஒரு மிகப்பெரிய மோசடி?

*கோவை-பெரியநாயக்கன்பாளையத்தில் கடன் மோசடி புகார்!*

*100 பெண்களை அறையில் அடைத்து மிரட்டல் - NGO நிர்வாகிகள், கனரா வங்கி மேலாளர் மீது பரபரப்பு புகார்*


*கோவை, அக்.27, 2026*


கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கனரா வங்கி மூலம் கடன் வாங்கி தருவதாக கூறி 100-க்கும் மேற்பட்ட பெண்களிடம் மோசடி செய்ததாக NGO நிர்வாகிகள் மற்றும் கனரா வங்கி மீது கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.


*அம்பேத்கர் மக்கள் விடுதலைக் கழகம் சார்பில் தலைவர் C.M.V.ரங்கநாதன்* தலைமையில் அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

 "கனரா வங்கி மூலம் ரூ.2 லட்சம் கடன் வாங்கி தருவதாக கூறி பெண்களை அழைத்து வந்து, ஒரு அறையில் அடைத்து வைத்து மிரட்டியுள்ளனர். பின்னர் ரூ.2 லட்சத்திற்கு பதிலாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மட்டும் கொடுத்து அனுப்பியுள்ளனர்."

இந்த மோசடிக்கு கனரா வங்கி மேலாளரும் உடந்தையாக இருந்துள்ளார். *NGO விஜய் மற்றும் NGO ஜெயந்தி* ஆகிய இருவரும் இந்த கும்பலின் தலைவர்களாக செயல்படுகின்றனர். மேலும் போலீசில் புகார் கொடுத்தால் ரூ.2 லட்சத்தை முழுமையாக கட்ட வேண்டும் என மிரட்டுகின்றனர்.

எனவே 100 பெண்களை அறையில் அடைத்து மிரட்டி பண மோசடி செய்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாகவே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக  இந்த கும்பலினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளனர் .ஆனால் எந்தவித நடவடிக்கையம் எடுக்கப்படாமல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சம்பந்தப்பட்ட காவல் நிலையம் செயல்பட்டதாக குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.

*கனரா வங்கி மேலாளரிடம் விசாரணை:*

இது சம்பந்தமாக கோவை பெரியநாயக்கன்பாளையம் கனரா வங்கி மேலாளர் *சத்திய மாதவன்* அவர்களிடம் கேட்ட பொழுது, முதலில் இதைப்பற்றி தெரியாது என்று மறுத்துள்ளார். பின்பு புகார் பற்றி விரிவாக எடுத்துக் கூறிய பின்பு,

- ரூ.2 லட்சம் கடன் தொகை தருவதாகவும், இதுவும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மட்டுமே தருவதாகவும்,

- தான் கர்நாடகாவில் பணியாற்றிய போது NGO-க்கள் மூலமாகவே மகளிர்களுக்கு கடன் வழங்கியதாகவும், அதே பாணியை தான் இங்கு பின்பற்றுவதாகவும்,

- ஆனால் NGO-க்கள் பற்றி தங்களுக்கு தெரியாது என்று கூறிவிட்டு, பிறகு *'ஜாமரை'* என்ற பெயரில் இயங்கி வரும் NGO நிறுவனர் *விஜய் ஆதித்யா* என்றும், அவர்களுக்கு கீழ் பணியாற்றும் *செந்தாமரை, தமிழ்ச்செல்வி, பிரியா, மீனாட்சி* உள்ளிட்ட நபர்களை பற்றியும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே புகார் மனு தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் இது சம்பந்தமாக தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கோ, கனரா வங்கி தலைமை நிர்வாகத்திற்கோ, காவல் நிலையத்திற்கோ எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.

மேலும் *ரூ.30 ஆயிரம் வைப்பு தொகையாக* பெற்றுக் கொள்வதாகவும் அவரே தெரிவித்தார். எதற்காக என்று கேட்ட பொழுது, சரியான நேரத்தில் பணம் கட்ட தவறினால் அவர்கள் இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்வதாகவும், இதற்கு RBI விதி உள்ளதா என்று கேட்ட பொழுது, விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை, தாங்களாகவே அதை உருவாக்கிக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

எனவே, தான் ,இந்த வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், NGO-க்களே முழுமையாக தவறு செய்துள்ளதாகவும், தற்பொழுது இந்த மாதம் முதல் புகார் தெரிவிக்கப்பட்ட NGO-க்களுக்கு கடன் வழங்குவதில்லை என்றும் தெரிவித்தார். இதன் மூலம் கனரா வங்கி மேலாளருக்கு நேரடியாக அவர்களுடன் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது.


*"இரும்புத்திரை" பட பாணி மோசடி:*


இந்த மோசடி என்பது தமிழ் திரைப்பட நடிகர் விஷால் நடித்த *"இரும்புத்திரை"* திரைப்படத்தை தழுவியது போன்று ஒரு மிகப்பெரிய மோசடி என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும். இத்திரைப்படத்தை காணாதவர்கள் அனைவரும் பாருங்கள் - எப்படி வங்கியில் கடன் மோசடி செய்யப்படுகிறது, அப்பாவி மக்கள் எப்படி மோசடி நபர்களின் கரங்களில் மாட்டிக் கொண்டு தள்ளாடுகின்றனர் என்பதை படம் தெளிவாக காட்டும், அதையே இந்த மோசடி பிரதிபலிக்கிறது.


*எஸ்.பி. உத்தரவு:*


இது சம்பந்தமாக திங்கட்கிழமை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டு, அவரும் உடனே சம்பந்தப்பட்ட பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளரை வரவழைத்து உடனடியாக விசாரணை செய்து *FIR பதிவு* செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.


இப்படி ஒரு மிகப்பெரிய மோசடியை போலீசார் எப்படி கையாளுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


_- டைம்ஸ் ஆப் ப்ரீடம்_

Post a Comment

புதியது பழையவை