*டைம்ஸ் ஆப் ப்ரீடம் - பிரத்யேக செய்தி | கோவை*
*காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்!*
*கரூர் பெண் கோவை எஸ்பியிடம் பரபரப்பு மனு - 15 பேர் கும்பல் ஆயுதங்களுடன் மிரட்டல்*
*கோவை / கரூர் - அக்.26, 2026*
சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த கரூர் மாவட்ட இளம்பெண், தனக்கும் தனது கணவரின் குடும்பத்திற்கும் தனது பெற்றோர் தரப்பில் கொலை மிரட்டல் விடுப்பதாக கோவை புறநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
*புகார் மனுவில் கூறப்பட்டுள்ள விவரம்:
போதும்பொன்னு(வயது 21) என்பவர் கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட ரத்தினம்பிள்ளை புதூரில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். 12-ம் வகுப்பு முடித்து குளித்தலையில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்துள்ளார். அங்கு கடைக்கு வந்த தமிழ்செல்வன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
போதும்பொன்னு * (MBC) வகுப்பை* சார்ந்தவர். தமிழ்செல்வன் *பட்டியல் இன (SC) வகுப்பை* சார்ந்தவர்.
சாதி வேறுபாடு காரணமாக திருமணத்திற்கு வீட்டில் மறுப்பு தெரிவித்ததாகவும், கடந்த 25 நாட்களாக வீட்டிலேயே அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ்செல்வனை மறந்து விட வேண்டும், இல்லாவிட்டால் உன்னையும் கொன்று விட்டு தமிழ்செல்வன் குடும்பத்தையும் முடித்து விடுவோம் என எனது தாயார் ஜெயலட்சுமி, தந்தை ஆறுமுகம், அக்கா கணவர்கள் மூர்த்தி, பரமேஷ்வரன், பெரியப்பா மகன் மணிகண்டன், சகோதரிகள் சௌந்தர்யா, கனகவள்ளி ஆகியோர் மிரட்டினர்"
என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் போதும்பொன்னு சனிக்கிழமை நள்ளிரவு *23.10.2026* அன்று வீட்டை விட்டு வெளியேறி, தமிழ்செல்வனை தொடர்பு கொண்டுள்ளார். எந்த பொருட்களையும் எடுக்காமல் வந்ததாக கூறப்பட்டுள்ளது.
மறுநாள் *24.10.2026* அன்று திருச்சி மாவட்டம், *தாத்தையங்கார்பேட்டையில்* உள்ள தமிழ்செல்வனின் குலதெய்வ கோவிலான *ஸ்ரீ பட்டாயிம்மன் கோவிலில்* இருவரும் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
*தற்போது உயிருக்கு பயந்து தலைமறைவு:*
திருமணத்திற்கு பின் உயிர் அச்சுறுத்தல் காரணமாக, கோவை மாவட்டம் *இடிகரையில்* உள்ள தமிழ்செல்வனின் சித்தப்பா *ராஜ்குமார்* வீட்டில் தம்பதியினர் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் போதும்பொன்னுவின் குடும்பத்தார் சுமார் *15 நபர்கள்* தமிழ்செல்வனின் சொந்த ஊரான கரூர் வீட்டிற்கு சென்று, அவரது சகோதரி துளசியிடம் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டியதாக தகவல் வந்துள்ளது.
"ஒரு கீழ் சாதிக்காரன் எங்கள் பெண்ணை திருமணம் செய்வதா? உங்கள் பெண்ணை தூக்கி சென்று விடுவோம், மாமனார், மாமியாரை கொலை செய்து விடுவோம். பெண்ணை ஒப்படைத்தால் உயிர் பிழைப்பீர்கள்"
என மிரட்டி வருவதாக துளசி அலைபேசி மூலம் தெரிவித்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
புகார் கொடுக்க கூட வெளியே செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும், எனவே தங்களுக்கும், தமிழ்செல்வனின் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோவை புறநகர் எஸ்பியிடம் தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கோவை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
_- டைம்ஸ் ஆப் ப்ரீடம்_

கருத்துரையிடுக